சப்–கலெக்டர் அலுவலகத்தை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகை

திருப்பத்தூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.

Update: 2018-01-12 23:00 GMT

திருப்பத்தூர்,

எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து திருப்பத்தூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பஸ் நிலையம் அருகே டிஜிட்டல் பேனர்களை வைத்தனர். அங்கு வந்த திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அவற்றை வைக்கக் கூடாது எனக்கூறி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நகர செயலாளர் ஏ.கே.சி.சுந்தரவேல் தலைமையில் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

‘‘பலமுறை சப்–கலெகடர் அலுவலகத்தில் அனுமதி பெற்று பேனர் வைத்தபோது, அதனை எடுத்து சென்று வருகின்றனர். எனவே பேனரை கட்ட அனுமதிக்க வேண்டும்’’ என அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் அட்சயா முருகன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சலீம், சரவணன், துரைபாண்டியன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களை சப்–கலெக்டர் கார்த்திகேயன் நேரில் அழைத்து பேசினார். அப்போது பேனர் வைப்பதற்கு, இனி தாங்கள் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என கூறியதோடு, அனுமதி பெற்ற பேனரை அப்புறப்படுத்த வேண்டாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அறிவுறுத்தினார். அதே நேரத்தில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அப்புறப்படுத்த சப்–கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்