கவர்னர் கிரண்பெடிக்கு அ.தி.மு.க. பாராட்டு

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கையால் இலவச துணி வழங்குவதில் நடைபெறவிருந்த ஊழல் தடுக்கப்பட்டது என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2018-01-12 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் புதுச்சேரி மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்கள் இதுவரை கண்டிராத துணிச்சலான எழுச்சியான பணிகளை மிகச்சிறந்த முறையில் புதுவை மாநில வளர்ச்சிக்காக அவர் செய்து வருகிறார்.

வார இறுதிநாட்களில் களப்பயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை நேரில்கேட்டு அதனை உடனே நிவர்த்தி செய்தல், நில அபகரிப்பு, ரவுடிகளை ஒடுக்குவது போன்ற அவருடைய பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கவர்னர் பதவி என்றால் அலங்கார பதவி இல்லை, மாநில மக்களின் வளர்ச்சிக்கான அதிகாரமிக்க பதவி என்பதை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காட்டி வருகின்றார்.

புதுவையை ஆளும் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு பதவியேற்றது முதல் எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் கவர்னரையும், மத்திய அரசையும் குறைகூறிக்கொண்டு காலத்தை ஓட்டி வருகிறது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது தொடர்பான கோப்புகளை உரிய நேரத்தில் தயார் செய்து கவர்னருக்கு அனுப்பாமல் கவர்னர் மீது வீண்பழி சுமத்தியது.

ஆனால் புதுவை மாநில மக்களின் மீது அக்கறை கொண்டு கவர்னர் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட கோப்புகளுக்கு அனுமதி அளித்து பொங்கல் இலவச பொருட்களும், துணிகளும் கிடைக்கும் விதமாக நடந்துகொண்டார். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களை கவர்னர் தடுக்கிறார் என்ற காங்கிரஸ் அரசின் பொய்யான பிரசாரம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மக்களின் வரிப்பணம் ஒரு துளிகூட வீணாகிவிடக்கூடாது என்ற கவர்னரின் அக்கறையால் பொங்கல் பரிசு பொருட்களின் வாயிலாகவும், இலவச துணிகளின் வாயிலாகவும், நடக்கவிருந்த மிகப்பெரிய ஊழல் கவர்னரின் நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் கூட தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்காத கவர்னரின் துணிச்சலை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். பொங்கல் பரிசு பொருட்களை புதுவை மக்களுக்கு நேர்மையாகவும், நேரிடையாகவும் கிடைக்க வழிவகை செய்த கவர்னருக்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்