இலவச பொங்கல் பொருட்கள் வினியோகம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுவையில் இலவச பொங்கல் பொருட்கள் வினியோகத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2018-01-12 23:45 GMT

புதுச்சேரி,

பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்கும் அரசின் முடிவுக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குழப்பங்கள் ஏற்பட்டன. இறுதியாக பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று இலவச பொருட்கள் வழங்க கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து இலவச பொங்கல் பொருட்களை வினியோகிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. கோவிந்தாசாலையில் உள்ள ரே‌ஷன்கடையில் இதை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, தனவேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் சிவப்பு நிற ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கி அவர் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பொருட்களாக 1 கிலோ பச்சரிசி, தலா 500 கிராம் வெல்லம், பச்சைப்பயறு மற்றும் முந்திரி பருப்பு, ஏலக்காய் ஆகிய 5 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்கள் சுமார் 3 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.4.33 கோடி செலவில் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சால்வை அணிவிக்கும்போது அவர் பையில் வைத்திருந்த பேனா மாயமானது. இதுபற்றி தெரியவந்ததும் அந்த பேனாவை பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. விழா முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் விழா நடந்த இடத்தில் இருந்து பேனா கண்டெடுக்கப்பட்டு முதல்–அமைச்சரிடம் வழங்கப்பட்டதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்