அனைத்து துறைகளிலும் தமிழ் சமுதாயம் தனி முத்திரை பதிக்க வழிபிறக்கட்டும் அமைச்சர் நமச்சிவாயம் பொங்கல் வாழ்த்து

அனைத்து துறைகளிலும் தமிழ் சமுதாயம் தனி முத்திரை பதிக்கட்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Update: 2018-01-12 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

பாரம்பரியம் மாறாமல் தமிழர் கலாசாரத்துடன் கொண்டாடப்படும் ஒப்பற்ற திருநாளாக பொங்கல் திருநாள் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், உணவு தந்து நம்மையெல்லாம் வாழ வைக்கும் உழவர்களுக்கும் நமக்காகவே நாளும் உழைத்துக்கொண்டிருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூரும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம்.

புத்தாடை அணிந்து, புத்தரிசி பொங்கலிட்டு தித்திக்கும் தேன் கரும்பினை சுவைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்து தை திங்களில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் வீரத்தை போற்றும் உன்னத பெருநாள். மக்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாடும் பொங்கல் திருநாளுடன் திருக்குறள் தந்த திருவள்ளுவர் பிறந்தநாளையும் பெருமையோடு கொண்டாடி மகிழ்வோம்.

மக்கள் நலம்பெறவும், மாநிலம் வளம்பெறவும், தமிழ் சமுதாயம் அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதிக்கவும், இந்த பொங்கல் திருநாளில் வழிபிறக்கட்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாள் என்பது மதம் சார்ந்த விழா அல்ல. அன்றாடம் வயல் வெளியில் அயராது பாடுபட்டு நாற்று வைத்து களை எடுத்து செந்நெல் விளைய வைத்து அறுவடை செய்து அந்த உழைப்பின் பயனாய் விளைந்த நெல்லை அரிசியாக்கி புதுப்பானை கொண்டு வாசலில் வைத்து பொங்கலாய் பொங்கி, அதனை எல்லாமுமாக விளங்கும் இயற்கை அன்னைக்கு படையலிட்டு அக்கம்பக்கத்தவர் அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு கொண்டாடுகிற தமிழர் மரபு சார்ந்த ஒரு திருநாள் பொங்கல்.

சாதி, மத வேறுபாடுகளை மறந்து இயற்கையை போற்றும் தமிழ் சமுதாயத்தின் பெருநாள். வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்தில் உறவுகளை பேணுகிற மகத்துவத்தை நாம் கைவிட்டு விடக்கூடாது. இந்த ஒரு நாளிலாவது நம்மை சுற்றிய உறவுகளை கண்டும் கேட்டும் அவர்களின் அன்பு பாராட்டும் விழாவாக நாம் காணும் பொங்கலை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்