தாய், தங்கையுடன் பெண் அதிகாரி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் உள்பட 4 பேர் மீது வழக்கு

வாசுதேவநல்லூர் அருகே தாய், தங்கையுடன் தபால்துறை பெண் அதிகாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது காதலன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-01-12 20:45 GMT

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் அருகே தாய், தங்கையுடன் தபால்துறை பெண் அதிகாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது காதலன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 30). தபால் நிலைய அதிகாரியான, இவர் தனது தாய் சீதா (55), தங்கை பத்மா (20) ஆகியோருடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பனையூரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேல்சாமி (33) என்பவரும், சொர்ணமும் காதலித்து வந்து உள்ளனர். அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இந்த நிலையில் திருமணத்துக்கு வேல்சாமி மறுத்து விட்டதால், மனவேதனை அடைந்த சொர்ணம் தனது தாய், தங்கையுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.

4 பேர் மீது வழக்கு

மேலும் சொர்ணம் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், எங்கள் 3 பேரின் சாவுக்கு வேல்சாமி, ராம்கி என்ற ராமச்சந்திரன், குமுதா, மெர்சி ஆகியோர் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக வேல்சாமி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விசாரணை

வாசுதேவநல்லூர் போலீசார், வேல்சாமியின் சொந்த ஊரான குருவிகுளம் அருகே உள்ள குறிஞ்சான்குளத்தில் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பனையூருக்கு சென்று வேல்சாமியின் தந்தை குருவையாவிடமும் விசாரித்தனர்.

வேல்சாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று வேல்சாமியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்