கடையநல்லூரில் பயங்கரம் ஐ.டி.ஐ. மாணவர் வெட்டிக்கொலை 5 பேரிடம் போலீசார் விசாரணை

கடையநல்லூரில் ஐ.டி.ஐ. மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.டி.ஐ. மாணவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் கந்தசாமி. வெளிநாட்டில் வேலை செய்து வந்த

Update: 2018-01-12 20:30 GMT

கடையநல்லூர்,

கடையநல்லூரில் ஐ.டி.ஐ. மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐ.டி.ஐ. மாணவர்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் கந்தசாமி. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மகன் முருகன் (வயது 17). இவர் சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் முதலாமாண்டு படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி படித்த முருகன், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மேலக்கடையநல்லூருக்கு வந்தார்.

பின்னர் அவர் தனது நண்பருடன் வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகனின் தாய் துரைச்சி, தனது மகனை பல இடங்களில் தேடியுள்ளார். கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் துரைச்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை தேடி வந்தனர்.

கொலை

இந்த நிலையில் மேலக்கடையநல்லூரை சேர்ந்த செல்லத்துரை, கோபி ஆகிய இருவரும் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்–இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபர்களிடம் விசாரித்தனர்.

அப்போது 6 பேர் கும்பல், தங்களையும், முருகனையும் கடையநல்லூர் பெரியகுளம் பகுதியில் வைத்து அரிவாளால் வெட்டியதாகவும், தாங்கள் தப்பி வந்து விட்டதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு முருகன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். முருகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:–

பொங்கல் பண்டிகை விடுமுறையில் வீட்டுக்கு வந்த முருகன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கும்கி முத்து, தங்கப்பாண்டி, பெரியசாமி, முத்து உள்பட 6 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றார்களாம். முருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் கோபி, செல்லத்துரை ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

எனினும் ஆத்திரம் தீராத மணிகண்டன் உள்பட 6 பேரும் முருகனையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேலக்கடையநல்லூர் பெரியகுளம் அருகே மணிகண்டன் உள்பட 6 பேரும் அரிவாளுடன் வந்துள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த முருகன், கோபி, செல்லத்துரை ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் அவர்கள் 3 பேரையும் மணிகண்டன் உள்ளிட்டோர் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் செல்லத்துரை, கோபி ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் தப்பி விட்டனர். ஆனால் முருகன் மட்டும் கொலை கும்பலிடம் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த கும்பல் முருகனை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

5 பேரிடம் விசாரணை

இதையடுத்து செல்லத்துரை, கோபி ஆகிய இருவரும் கொடுத்த தகவலின் பேரில், மணிகண்டன், கும்கி முத்து, தங்கப்பாண்டி, பெரியசாமி, முத்து ஆகிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்