வண்டலூர் பூங்கா இணையதளத்தை தமிழில் அமைக்க கோரிக்கை
ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால் விலங்குகளை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்கா இணையதளத்தை தமிழில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்த நாளில் இருந்து கடந்த 33 வருடமாக நேரில் சென்றுதான் நுழைவுச்சீட்டுகளை வாங்கி, பூங்காவை பொதுமக்கள் சுற்றிப்பார்த்து வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஆன்–லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்படும் என்று கடந்த வாரம் பூங்கா நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணையதளத்தை தற்காலிகமாக முடக்கி வைத்து, ஆன்–லைன் முறை அமல்படுத்துவதற்காக இணையதளத்தை புதுப்பிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கான பணிகள் முடிந்தவுடன் நேற்று முன்தினம் முதல் ஆன்–லைன் வழியாக பொதுமக்கள் பூங்காவுக்கான நுழைவு சீட்டுகள் மற்றும் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்களுக்கு டிக்கெட் பெரும் திட்டத்தை தொடங்கியது. இதற்கான இணையதள முகவரி www.aazp.in அல்லது WWW.vandalurzoo.com ஆகியவற்றை பூங்கா நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு இணையதளத்திற்குள்ளும் சென்று பார்க்கும் போது, ஏற்கனவே பூங்காவிற்கு இருந்த இணையதளத்தை விட மிகவும் புதுப்பொலிவுடன் பார்வையாளர்களையும், சிறுவர்களையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் ‘பளிச்’ என்று வண்ணமயமாக காணப்படுகிறது. இதில் பூங்காவில் உள்ள முக்கிய விலங்குகளின் புகைப்படங்கள் தெளிவாக உள்ளன.
இந்த இணையதளத்தில் பூங்காவின் வரலாறு, விலங்குகளின் கர்ப்பகால தகவல்கள் முதல் அதனுடைய குணநலன்கள், தற்போது எத்தனை விலங்குகள் பூங்காவில் இருக்கிறது. மற்றும் விலங்குகள் தத்தெடுப்பு முறைகள், 2009–ம் ஆண்டு முதல் 2012 வரை யார்?, யார்?, விலங்குகளை தத்தெடுத்துள்ளனர் என்ற விவரம், பூங்கா ஆணையத்தின் தகவல்கள், பார்வையாளர்களுக்கு தேவைப்படும் பூங்கா திறந்து இருக்கும் நேரம், வார விடுமுறை தினம், பூங்காவின் கட்டண விவரங்கள், பூங்காவின் வரைபடங்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்–லைன் டிக்கெட் பதிவு செய்யும் முறை உள்பட பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த புதிய இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இணையதளத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்ற பெயர் மட்டுமே தமிழில் இருக்கிறது. மற்ற அனைத்து தகவல்களும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா இருப்பதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆங்கிலத்தில் இணையதளம் அமைத்து இருக்கலாம். இது தவறு கிடையாது.
ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவின் வரலாறு, அங்கு உள்ள விலங்குகளின் விவரம், குணநலன்கள் பற்றி தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தை தமிழ் வடிவத்திலும் வனத்துறை அதிகாரிகள் அமைத்து இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
தமிழக அரசு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஐகோர்ட்டில் கூட தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவின் இணையதளம் முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது வருத்தமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆங்கில மொழி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் எப்படி இணையதளத்தை பயன்படுத்தி ஆன்–லைன் டிக்கெட் பெற முடியும். அப்படி என்றால் ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே பயன்பெற ஆன்–லைன் வசதி தொடங்கப்பட்டதா?. தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
பூங்காவின் வரலாறு, விலங்குகளின் குணநலன்கள் பற்றி தமிழ் படித்தவர்கள் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?. தற்போது தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் இணையதளங்கள் அனைத்தும் தமிழ் வடிவில் இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணையதளத்தையும் தமிழ் வடிவத்தில் அமைக்க வண்டலூர் பூங்கா ஆணையத்தின் தலைவராக உள்ள தமிழக முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.