கோவில்பட்டி அருகே, பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ–மாணவிகள் சாலைமறியல்

கோவில்பட்டி அருகே, பஸ்கள் இயக்கப்படாததால், மாணவ–மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பசுவந்தனை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-11 23:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு, கெச்சிலாபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ– மாணவிகள் கோவில்பட்டி, ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். இவர்கள் கோவில்பட்டி– பசுவந்தனை ரோட்டில் கெச்சிலாபுரம் விலக்கில் இருந்து பஸ் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 8–வது நாளாக நீடிப்பதால் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து காலை 9 மணியளவில் கெச்சிலாபுரம் விலக்கில் மாணவ– மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி– பசுவந்தனை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ரமேசனை செல்போனில் தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார்.

பின்னர் கோவில்பட்டியில் இருந்து தனியார் மினி பஸ்சை வரவழைத்து ஊத்துப்பட்டி பள்ளிக்கூடத்துக்கு மாணவ– மாணவிகளை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவில்பட்டியில் பயிலும் மாணவ– மாணவிகளை போலீசார், தங்களது காரில் ஏற்றி சென்று, பள்ளிக்கூடங்களில் இறக்கி விட்டனர். இதனால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்