நெல்லையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-01-11 22:49 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி டீன் கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ரேவதி பாலன், ஆஸ்பத்திரி துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செவிலியர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் செவிலியர் பயிற்றுனர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மாணவிகள் பாரம்பரிய பட்டு சேலைகள் உடுத்தி, வண்ண கோலமிட்டு, கரும்புகளுடன் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டு அனைவரும் கொண்டாடினர். மாணவர்கள் வேட்டியும், மாணவிகள் சேலையும் அணிந்திருந்தனர்.

நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சனத்குமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா மற்றும் பொங்கல் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வாசகர் வட்ட தலைவர் மரியசூசை தலைமை தாங்கினார். வாசகர் வட்ட பொருளாளர் வெங்கடாசலம், பேராசிரியர் ஜெபமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட செயலாளர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். பொங்கல் கலைநிகழ்ச்சிகளை பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார். மங்கள இசை, நகைச்சுவை அரங்கம், சிறப்பு கவியரங்கம், நையாண்டி மேளம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, பாலசுப்பிரமணியன், அருணா சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்