மலையடிவாரப்பகுதிகளுக்கு வன விலங்குகள் இறங்குவதை தடுக்க 17 கிலோ மீட்டரில் யானை தடுப்பு அகழி

சாப்டூர் அருகே மலைப்பகுதியில் இருந்து மலையடிவாரப் பகுதிகளுக்கு வன விலங்குகள் இறங்குவதை தடுக்கும் வகையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் யானை தடுப்பு அகழி அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-01-11 22:15 GMT
பேரையூர்.

பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகம் விருதுநகர் மாவட்டம், தாணிப்பறையில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் வரை 25 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, கரடி, மான், சாம்பல் நிற அணில்கள், காட்டு மாடு, காட்டுப்பன்றி மற்றும் பல்வேறு விலங்கினங்கள் வசித்து வருகின்றன. அடிக்கடி யானை மற்றும் காட்டு மாடுகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் விலங்கின உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.

சென்ற ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டு 7 காட்டு மாடுகள் உயிரிழந்தன. இந்த நிலையில் சாப்டூர் வனத்துறை சார்பில் யானை மற்றும் பிற விலங்குகள் அதிகமாக இறங்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு யானை தடுப்பு அகழி அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சாப்டூர் வனச்சரகர் பொன்னுச்சாமி கூறியதாவது:-

வனத்துறை சார்பில் இதுவரை 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு யானை தடுப்பு அகழி அமைக்கப்பட்டுள்ளது. சாப்டூர் முடங்கிக்காடு முதல் மல்லப்புரம் அய்யனார் டேம் வரை இந்த அகழி வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 அடி ஆழமும், 9 அடி அகலமும் கொண்டதாக அகழி அமைக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர் மட்டம் உயரும்

இந்த அகழி அமைப்பதால் யானை மற்றும் பிற விலங்குகள் மலைப்பகுதியிலிருந்து அடிவாரப் பகுதிக்கு வருவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனால், விலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படும். மேலும் மலையடிவாரப் பகுதி விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும் நடப்பு நிதியாண்டில் பன்றிகளால் சேதமடைந்த விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் 25 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சம் வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்