சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை தி.மு.க.- அ.தி.மு.க.வினர் முற்றுகை

சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி உள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

Update: 2018-01-11 23:00 GMT
சூரமங்கலம்,

சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. தற்போது உள்ளாட்சி மன்றங்களுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு அவை வெளியிடப்பட்டுள்ளன. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இது தொடர்பாக தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பொதுமக்களும் இந்த குளறுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். விரைவில் கோர்ட்டை அணுக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

சூரமங்கலம் 1-வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர், புதிய அம்பேத்கர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர், 20-வது வார்டுக்கான பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சூரமங்கலம் பகுதி தி.மு.க. செயலாளர் தமிழரசன், அவைத்தலைவர் பழனியப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரன், துரை, தே.மு.தி.க.வை சேர்ந்த சந்திரன், சரவணன் மற்றும் பொதுமக்கள் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் தங்களது ஆட்சேபனை மனுவை மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபுவிடம் கொடுத்தனர். அந்த மனுவில், வார்டு மறுவரையறை செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தை மறுபரிசீலனை செய்து, மீண்டும் 1-வது வார்டிலேயே இணைத்திட வேண்டும் என்றும், தங்கள் பகுதியை நீண்ட தொலைவில் இருக்கும் 20-வது வார்டில் சேர்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒருதலைபட்சமாக மேற்கொண்ட இந்த நடவடிக்கையை சரிசெய்யாவிட்டால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறப்பட்டிருந்தது. இந்த முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்