கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்

காட்பாடியில் கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2018-01-11 23:00 GMT
காட்பாடி,

காட்பாடி தாலுகா பழைய காட்பாடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 58). காட்பாடியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் காட்பாடி தாராபடவேடு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஸ்டாலின் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, கத்தி மற்றும் அரிவாளை எடுத்து கொண்டு வேகமாக ஸ்டாலினை நோக்கி ஓடி வந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிய ஸ்டாலினை அவர்கள் கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதைத்தொடர்ந்து கொலை செய்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட ஸ்டாலினின் மகன் சின்னராஜா காட்பாடி போலீல் புகார் செய்தார். அதில் சொத்து தகராறில் என்னுடைய தந்தையை, அவருடைய தம்பி எஸ்.ராஜா, அவருடைய மகன் சந்தோஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளார்.

அதன்பேரில் எஸ்.ராஜா, அவருடைய மகன் சந்தோஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் வீச்சரிவாள் சிக்கியதால், ஸ்டாலினை கொலை செய்தவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா, சொத்து தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு ஸ்டாலினை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை குற்றவாளிகளை கைது செய்யும்வரை ஸ்டாலின் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறினர். இதனால் வேலூர்- திருவண்ணாமலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்டவரிசையில் நின்றிருந்தன.

தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்பு ஸ்டாலின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 2½ மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்