அண்ணனை கொன்றதால் பழி தீர்த்த தம்பி: பிரபல ரவுடி வெட்டிக் கொலை

அண்ணனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக பிரபல ரவுடியை அவரது தம்பி வெட்டிக் கொலை செய்தார். கொலை செய்யப்பட்டவரின் நண்பனே இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2018-01-11 00:36 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்தி என்கிற கொப்பு கார்த்தி (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு கொலை வழக்கில் கைதாகி சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்படி காரைக்கால் போலீஸ் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்தார்.

இந்தநிலையில் காரைக்கால் புதிய பஸ் நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் கொப்பு கார்த்தி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென்று கொப்பு கார்த்தியை வெட்ட முயன்றனர். ஆனால் அவர் புளியங்கொட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு சந்தில் தப்பி ஓடினார். அவருடன் வந்த அவரது நண்பரும் தப்பி ஓடினார். ஆனால் அந்த ஆசாமிகள் கொப்பு கார்த்தியை மட்டும் விடாமல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர். வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்கேயே கிடந்தார்.

இதுபற்றி அறிந்த காரைக்கால் நகர போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கொப்பு கார்த்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது கொப்பு கார்த்திக்கும் புதுச்சேரி குருமாம்பேட்டையை சேர்ந்த ரவுடியான ஜெகன் என்கிற ஜெகதீசனுக்கும் இடையே போட்டி இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கொப்பு கார்த்தியும், அவனது கூட்டாளிகள் 8 பேரும் சேர்ந்து ரவுடி ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கொப்பு கார்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்து தினமும் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இதற்காக அவர், தனது நண்பர்களான தினேஷ், விக்கி ஆகியோருடன், காரைக்கால் பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.

ரவுடி ஜெகனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரது தம்பி ராஜேஷ் கார்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். இந்தநிலையில் காரைக்காலில் கொப்பு கார்த்தி தங்கி இருந்த விவரம் ராஜேசுக்கு தெரியவந்தது. அவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்தநிலையில் கொப்பு கார்த்தியின் நண்பரான அரவிந்த் என்பவரை ராஜேஷ் தனது பக்கம் இழுத்துக்கொண்டார்.

சம்பவத்தன்று இரவு ராஜேஷ் தனது கூட்டாளிகள் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் காரைக்காலுக்கு சென்றனர். அவர்கள் புளியங்கொட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காரில் வந்தனர். இதன்பின் ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டபடி அரவிந்த் தனது நண்பரான கொப்பு கார்த்தியுடன் செல்போனில் பேசி அவரை அங்கு அழைத்தார். இதனை நம்பி கொப்பு கார்த்தியும் அங்கு வந்தார்.

அப்போது காரில் இருந்து ராஜேசும், அவரது கூட்டாளிகளும் இறங்கி கொப்பு கார்த்தியை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய போது தான் ராஜேஷ், அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொப்பு கார்த்தியை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கொப்பு கார்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த கொலைக்கு நண்பனே உடந்தையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்