அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி பட்டதாரி வாலிபர் கைது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அலங்கிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தெய்வீகன் மகன் தமிழ்செல்வன் (வயது 22). இவர் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தகவலை ‘வாட்ஸ்–அப்’ மூலம் பல்வேறு குழுக்களில் பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த சில இளைஞர்கள், தமிழ்செல்வனை செல்போனில் தொடர்பு கொண்டு அரசு வேலை விவரம் குறித்து பேசினர். அப்போது அவர், தான் மத்திய அரசின் ‘டிஜிட்டல் சேவா’ திட்டத்தின் தமிழக கண்காணிப்பாளர் என்றும் ஆதார் அட்டை விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்று கூறினார்.
இதை நம்பிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு பேசியதற்கு அனைவரிடமும் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதோடு ஒவ்வொருவரிடம் இருந்தும் உரிய ஆவணங்களை பெற்று அதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500–ஐ வாங்கியுள்ளார். அவ்வாறு விண்ணப்ப கட்டணத்தை பெற்றவர்களிடம் டிசம்பர் மாத இறுதியில் பணி நியமன ஆணை வரும் என்று கூறினார்.
அதன் பின்னர், அவர்களை தமிழ்செல்வன் தொடர்பு கொண்டு வேலைக்கான அழைப்புக்கடிதம் வந்துவிட்டது. அதற்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்றும் பணம் கொடுத்தால் உடனே அழைப்பு கடிதத்தை அவரவர் வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பி வைப்பதாகவும், இந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்துமாறும் கூறியுள்ளார்.
அதன்படி அந்த இளைஞர்களும் தமிழ்செல்வன் கொடுத்த, வங்கி கணக்கு எண்ணுக்கு பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் தமிழ்செல்வன் கூறியபடி, அந்த இளைஞர்களுக்கு டிசம்பர் மாத இறுதியில் பணி நியமன ஆணைக்கான கடிதம் வரவில்லை.
இதனால் தாங்கள் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு புகார்கள் அளித்தனர். அதில், மத்திய அரசு திட்டத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த தமிழ்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் அந்த புகார்கள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தமிழ்செல்வனை பிடிக்க போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தமிழ்செல்வனை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டையில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற தமிழ்செல்வனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்துள்ளதும், படித்து முடித்து வேலை கிடைக்காத விரக்தியில், ‘வாட்ஸ்–அப்’ குழு மூலம் தான் மத்திய அரசின் ‘டிஜிட்டல் சேவா’ திட்டத்தின் தமிழக கண்காணிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் பலரிடம் மத்திய அரசு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த, மோசடி செய்ய பயன்படுத்திய ஆதார் மையம் என்ற பெயர் கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், ரூ.48 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழ்செல்வனின் வங்கி கணக்கை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலம் போலீசார் முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.