மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி.க்கள் வெடித்து சிதறின

ஊத்துக்கோட்டை அருகே மரம் வெட்டியபோது மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் டி.வி.க்கள் வெடித்து சிதறின. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-10 23:25 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரிஞ்சேரியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை இங்குள்ள ஏரிக்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் வெட்டினர். அப்போது மரக்கிளை ஒன்று மின் கம்பிகள் மீது விழுந்தது.

இதனால், அருகில் உள்ள குடியிருப்பில் 50–க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி.க்கள் வெடித்து சிதறின. குளிர்சாதன பெட்டிகள் பழுதடைந்தன. இதனால் பதறிப்போன பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

பின்னர் அவர்கள் ஏரிக்கரை பகுதியில் ஊத்துக்கோட்டை–திருவள்ளூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊத்துக்கோட்டை துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் குமரகுருபரன், அதிகாரி நஜீர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்