“எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச எனக்கு பிடிக்கவில்லை” விஜயகாந்த் பேச்சு

“எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச எனக்கு பிடிக்கவில்லை“ என சேலம் அருகே தாரமங்கலத்தில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசினார்.

Update: 2018-01-10 23:15 GMT
தாரமங்கலம்,

தே.மு.தி.க. சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஏழைகளுக்கு பொங்கல் பொருட்களை விஜயகாந்த் வழங்கி வருகிறார். அதன்படி, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நேற்று மாலை ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இருந்து தாரமங்கலத்துக்கு காரில் வந்தார். பின்னர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினர்.

விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:-

தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை, சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பேச மறுக்கிறார்? அவர் இந்த பிரச்சினையில் தலையிட்டு பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச எனக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

சேலம் மாவட்டம் எப்போதுமே விஜயகாந்தின் எக்கு கோட்டை ஆகும். தே.மு.தி.க. சார்பில் நடத்தப்படும் பொங்கல் விழாவுக்கு அனுமதி மறுத்த முதல்-அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஆனால் யார் மறுத்தாலும் ஏழை, எளிய மக்களை விஜயகாந்த் சந்திப்பதை தடுக்கவே முடியாது. சாதி, மதம், மொழி, இனம் ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டவர் விஜயகாந்த். தமிழர்களின் பொங்கல் பண்டிகையை மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகை, ரம்ஜான் பண்டிகை என அனைத்து சமுதாய மக்களின் விழாவை கொண்டாட கூடியவர் விஜயகாந்த் மட்டும் தான்.

முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் ஊழல் உள்ளது. இதுவே ஆட்சிக்கு ஒரு சான்று.

மக்கள் பிரச்சினையை பற்றி எடுத்து பேசவும், போராட்டம் நடத்தவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் நமது விஜயகாந்திற்கு உண்டு. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவை எதிர்த்து பேசியவர் விஜயகாந்த். அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். தமிழக மக்களுக்கு உணவு, உடை, வசிக்க வீடு, அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பது இவரது லட்சியம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. விரைவில் அவரது தலைமையில் நல்லாட்சி மலரும். சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக விரைவில் விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வழங்கினர். மேலும், கட்சி சின்னமான முரசுவை அவர்கள் இருவரும் இசைத்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினர். 

மேலும் செய்திகள்