மதுரையில் இருந்து தாராபுரம் வந்த அரசு பஸ்சை ஊட்டிக்கு இயக்க மறுத்த தற்காலிக டிரைவர், மற்ற டிரைவரை ஓட்டிச்செல்லுமாறு கெஞ்சல்

மதுரையில் இருந்து தாராபுரம் வந்த அரசு பஸ்சை ஊட்டி மலைப்பாதையில் தற்காலிக டிரைவர் ஓட்ட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பஸ்சை நகர பஸ் டிரைவரிடம் ஓட்டும்படி கெஞ்சினார்.

Update: 2018-01-10 23:06 GMT

தாராபுரம்,

மதுரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 29). இவர் தனியார் பஸ்சில் சில நாட்கள் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். அதன்பின்னர் வாடகை கார் ஓட்டும் பணியில் இருந்து வருகிறார். தற்போது அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பதற்காக, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்கள் தற்காலிகமாக வேலைக்கு சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஓட்டுனர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி செல்வம் தற்காலிக பணியில் சேர்ந்து அரசு பஸ்சை ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாரிகள் செல்வத்திடம் மதுரையிலிருந்து ஊட்டிக்கு செல்லும் பஸ்சை கொடுத்து ஓட்டச்சொல்லியுள்ளனர்.

செல்வதற்கு தொலை தூரம் பஸ் ஓட்டி பழக்கம் இல்லாததாலும், அதுவும் மலைப்பிரதேசத்தில் பஸ் ஓட்டிப்பழக்கம் இல்லாததால், ஊட்டிக்கு பஸ்சை ஓட்டிச் செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் அதிகாரிகள் செல்வத்திற்கு ஊட்டி வண்டியை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அவருடன் நடத்துனராக மதுரையை சேர்ந்த மகேஷ் என்பவர் வந்துள்ளார்.

மதுரையிலிருந்து தாராபுரம் வரை பஸ்சை ஓட்டி வந்த செல்வத்திற்கு, அதற்கு மேல் பஸ்சை ஓட்ட முடியவில்லை. அதனால் பஸ்சை தாராபுரம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு போனில் தொடர்புகொண்டு, அதிகாரிகளிடம் பிரச்சினையை கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள் உங்களுக்குத் தெரிந்த ஓட்டுனர்கள் யாராவது அங்கு இருந்தால் உதவிக்கு அழைத்து கொள்ளுங்கள். இல்லையேல் நமது கிளை அலுவலகத்திற்கு உட்பட்ட வேறு பஸ் ஓட்டுனரிடம் சொல்லி உங்கள் வண்டியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதையடுத்து செல்வம் கோவை மற்றும் திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசு பஸ்கள் தாராபுரம் பஸ் நிலையம் வந்ததும், அதன் ஓட்டுனர்களிடம் சென்று தன்னுடைய பிரச்சினையை சொல்லி, பஸ்சை மாற்றி ஓட்டிக்கொள்ள கேட்டுள்ளார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செல்வத்தின் வேண்டுகோளை எந்த ஓட்டுனரும் ஏற்கவில்லை.

செல்வம் ஓட்டிவந்த பஸ் பயணிகள் நேரமாகிவிட்டதை தெரிவித்து, பஸ்சை ஓட்டும்படி செல்வத்திடம் கேட்டுக்கொண்டனர். வேறு வழியின்றி செல்வம் மீண்டும் பஸ்சை ஓட்டிக் கொண்டு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூளவாடியிலிருந்து தாராபுரம் நோக்கி ஒரு நகர பஸ் எதிரே வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை செல்வம் தடுத்து நிறுத்தி, பஸ் ஓட்டுனரிடம் தனது பிரச்சினையை சொல்லி, பஸ்சை மாற்றி ஓட்டிக்கொள்ளலாம் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.

அதை டவுன் பஸ்சின் ஓட்டுனர் ஏற்க மறுத்துவிட்டதால், வேறு வழியில்லாமல் செல்வம் பஸ்சை ஊட்டிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகளுக்கு, தற்காலிக ஓட்டுனரான செல்வம் தங்களை பத்திரமாக ஊர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பாரா என்ற சந்தேகமும் மிகுந்த அச்சமும் ஏற்பட்டது. இருப்பினும் போதுமான பஸ் வசதி இல்லாத காரணத்தால் செல்வத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்ந்தார்கள்.

மேலும் செய்திகள்