7-வது நாளாக போராட்டம் நீடிப்பு: தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதையடுத்து தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 266 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், பேரணி போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு கோர்ட்டு சாலையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தொ.மு.ச. பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையில் சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், எச்.எம்.எஸ் பொதுச்செயலாளர் முருகேசன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மாரியப்பன், தமிழக மக்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏப். சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். அண்ணா சிலை அருகே பேரணி வந்த போது அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் பேசினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 266 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் நீலமேகம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் அஞ்சுகம்பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சந்தித்து பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நீதிமன்றம் வேலைநிறுத்தப்போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து வழங்கிய தடையை நீக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தினர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்