சிவகங்கையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

சிவகங்கையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் லதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-01-10 23:05 GMT

சிவகங்கை,

மாவட்டத்தில் ‘தூய்மை சிவகங்கை; பசுமை சிவகங்கை’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும், கழிப்பறை கட்டி பயன்படுத்திடவும், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்று தரம் பிரித்து பயன்படுத்தவும் மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்புவனம் ஒன்றியம் கானூர் ஊராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது விழிப்புணர்வு படங்கள் வரைவதற்காக 40 சுவர்கள் தேர்வு செய்யப்பட்டன. நிகழ்ச்சியையொட்டி அந்த சுவர்களில் வர்ணம் பூசுதல் மற்றும் விழிப்புணர்வு படங்கள் வரையப்பட்டன. முன்னதாக கலெக்டர் லதா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியையொட்டி கிராம பெண்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது கிராம பெண்கள் கோலாட்டம் ஆடினர். அவர்களுடன் கலெக்டர் லதாவும் கலந்துகொண்டு கோலாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரோடு திட்ட இயக்குநர் காஞ்சனா மற்றும் வருவாய்த்துறை பெண் ஊழியர்களும் இணைந்து கோலாட்டம் ஆடினர்.

பின்னர் கலெக்டர் லதா கூறும்போது, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கவும், அதன் பயன்பாட்டினை தவிர்ப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக சிவகங்கையை மாற்றுவதற்கான முதல்கட்ட முயற்சியாகும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது அவசியம் துணிப்பைகளை கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும். மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்