பஸ்–டிராக்டர் நேருக்கு நேர்மோதல் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு

அருப்புக்கோட்டையில் தனியார் பஸ்சும் டிராக்டரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தார்கள்.;

Update: 2018-01-10 23:04 GMT

அருப்புக்கோட்டை,

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நேற்று காலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் அரசு பஸ்கள் போதுமானதாக ஓடாத நிலையில் இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி அளவில் அந்த பஸ் அருப்புக்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி ஒரு டிராக்டர் சென்றது. இதில் விவசாய கூலித்தொழிலாளர்கள் இருந்தனர். எதிர்பாராதவிதமாக இரு வாகனமும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியதோடு நடுரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டரும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த அருப்புக்கோட்டை பாலவநத்தத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் அருண்குமார்(வயது19), உதிரகுமார் என்பவரது மகன் மாரிச்செல்வம்(19) மற்றும் செல்வம்(50) ஆகிய 3 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

பலியான அருண்குமாரும் மாரிச்செல்வமும் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்கள். காலையில் கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார்கள். செல்வம் பெயிண்டராக இருந்தார்.

விபத்தில் பஸ் மற்றும் டிராக்டரில் வந்த 32 பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தனபால், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோட்டாட்சியர் செல்வி, தாசில்தார் ரமணன் ஆகியோரும் அங்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த விபத்தினால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., விபத்து குறித்து அறிந்ததும் அருப்புக்கோட்டைக்கு விரைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். பலியானோரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்