பால் வியாபாரி கொலை வழக்கில் தந்தை–மகனுக்கு ஆயுள் தண்டனை ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவு
ராமநாதபுரம் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்தன் (வயது 35). இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தன் பசு மாடுகளை வைத்து கூட்டுறவு சங்கத்திற்கு பால் வினியோகம் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த நாகராஜன்(59) மற்றும் அவருடைய மகன் கேசவன்(30) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. நாகராஜனும், கேசவனும் பாலில் தண்ணீர் கலப்பதாக கூட்டுறவு சங்கத்தில் ஆனந்தன் அடிக்கடி புகார் செய்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன், அவரது தந்தை நாகராஜன் மற்றும் நண்பர் தினேஷ்ராஜா ஆகியோர் சேர்ந்து கடந்த 3.6.2011 அன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஆனந்தனை விரட்டிச்சென்று ஊருணிக்காரன் வலசை அருகே வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் மதுரை மற்றும் ராமேசுவரம் கோர்ட்டுகளில் சரணடைந்தனர். சம்பவம் நடந்த ஒரு வருடத்தில் 3–வது குற்றவாளியான ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த தினேஷ்ராஜா (30) கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனார்.
வழக்கில் தொடர்புடைய நாகராஜன் தற்போது ஆர்.எஸ்.மடை கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேசுவரன் குற்றம்சாட்டப்பட்ட கேசவன், அவருடைய தந்தை நாகராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் கேசவனுக்கு ரூ.20,000, நாகராஜனுக்கு ரூ.10,000–மும் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் ஆஜரானார்கள்.