வங்கியை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு திடீர் போராட்டத்தால் பரபரப்பு

திருவட்டார் அருகே வங்கியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-10 23:00 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே வீயன்னூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையை திருவட்டாருக்கு இடமாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியானது.

இதற்கு வங்கியின் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவத்தனர். மேலும், இந்த கிளை வீயன்னூரிலேயே செயல்படவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். மேலும், உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர்.

திடீர் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலையில் மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், செயலாளர் ரவி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுஜித்குமார் உள்பட ஏராளமானோர் வங்கியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்தனர். அதனால் அவர்கள் வங்கியின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் பொதுமேலாளர் அருணகிரி விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி அவரிடம் கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து உயர்அதிகாரிகளிடம் பேசி அதன்படி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்