7–வது நாளாக தொடரும் போராட்டம்: தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 7–வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-01-10 23:04 GMT

ஈரோடு,

ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கடந்த 4–ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடைய போராட்டம் 7–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்து சேவை முடங்கிக் கிடக்கிறது. கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் குறைவான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. காலை, மாலை வேளைகளில் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதேபோல் தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமனம் செய்து அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், குறைந்த அளவிலான பஸ்களே அதுவும் குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டனர். மேலும், பொதுமக்களும் பஸ் கிடைக்காத காரணத்தினால் வெளியூர் செல்லும் பணிகளை ஒத்திவைத்தனர்.

போக்குவரத்து வசதி முடங்கியதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வழக்கத்தைவிட கடந்த ஒரு வாரமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது. மேலும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக சரக்கு வாகனங்களில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களும் தங்களுடைய போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அதன்படி ஈரோடு சென்னிமலைரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்