அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும் இயல்பு நிலை திரும்புகிறது
திருப்பூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது.
திருப்பூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை மாற்றுவதற்காக போக்குவரத்து துறையும், அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஓரளவுக்கு சிரமங்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்களின் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தேவையான இடங்களுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஏராளமான தற்காலிக பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் கடந்த பல நாட்களாக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான பஸ்கள் தற்போது மெல்ல மெல்ல இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் இயல்பு நிலை திரும்புகிறது.
பஸ்நிலையங்களிலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களின் தொழிலாளர்களை கொண்டு செல்லும் வாகனங்களும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் அதிகமாக இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், அரசு பஸ்கள் அதிகளவு சேதமாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை தற்காலிக ஓட்டுனரான சந்திரசேகர் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் குமரன் ரோட்டை தாண்டி யூனிவர்செல் தியேட்டர் ரோட்டில் வந்தது. யூனிவர்செல் தியேட்டர் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து பஸ்சை வளைத்து செல்ல முயன்ற போது ரவுண்டானாவில் பஸ்சில் முன்பக்க படிகட்டு உரசியது. இதில் படிகட்டு முழுவதும் உடைந்து நாசம் ஆனது. எதிரே வந்த ஆட்டோவிலும் லேசாக உரசியது. இதில் ஆட்டோவின் முன்பக்கத்திலும் சிறிது சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதிவழியிலேயே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுபோல திருப்பூரில் இருந்து அவினாசி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை தற்காலிக பஸ் டிரைவர் ஓட்டிவந்தார். அந்த பஸ் திருப்பூர் வளம்பாலம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. தொடர்ந்து அந்த பஸ்சில் வந்த பயணிகளும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்காலிக டிரைவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான சம்பவங்களும், சேதங்களும் ஏற்பட்டு வருவதால் பஸ் பயணிகள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த வேலை நிறுத்தம் மீது தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.