கிராம நிர்வாக அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் 2½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2018-01-10 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62).

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருடைய மனைவி ஆண்டாள் (58). இவர்களுடைய மகள் வெளிநாட்டில் இருப்பதால், கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் அருகே எசனையில் வசித்து வந்த ஆண்டாளின் தாய் நேற்று முன்தினம் இறந்தார். இதையறிந்ததும் ஆண்டாள் வீட்டை பூட்டி விட்டு தனது கணவருடன் எசனைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று மதியம், ஆண்டாள் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆண்டாள் தனது கணவரை உடனே அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் தட்டு, செம்பு உள்ளிட்ட 2½ கிலோ வெள்ளி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி உள்பட போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகராஜன், மனைவியுடன் வெளியே செல்வதை நன்கு நோட்டமிட்டு கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்