சாலையின் தடுப்பு கட்டையில் பஸ் மோதி கவிழ்ந்ததில் பெண் பலி 12 பயணிகள் காயம்

விராலிமலை அருகே சாலையின் தடுப்பு கட்டையில் பஸ் மோதி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். 12 பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2018-01-10 23:00 GMT
விராலிமலை,

திருவனந்தபுரத்திலிருந்து, சிதம்பரத்திற்கு நேற்று முன்தினம் மாலை 30 பயணிகளுடன் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை அந்த பஸ் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரம் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர்.

இதில் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி புதுக்கோட்டையைச் சேர்ந்த யூஜின் ஜோசப் மனைவி நிர்மலா(வயது 60) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த நிர்மலாவின் கணவர் யூஜின் ஜோசப்(65), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெனால்டு(36), அவரது மனைவி அஸ்வினி(26), மகள் ஆரோ மெடிசா(2), கன்னியாகுமரி நத்தாளத்தை சேர்ந்த ரவிக்குமார்(29), அவரது மனைவி லெட்சுமி(28), மகன் அப்சரஸ்(3), காரைக்கால் திருநள்ளாரை சேர்ந்த சேகர் மகன் கவுதம்(17), மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்(46), கூத்தூரை சேர்ந்த ஆன்ரோ(35), முட்டம் பகுதியை சேர்ந்த சகாய பிரதீஸ்(29), திருவனந்தபுரம் குளக்கரையைச் சேர்ந்த திலுதின்(26) ஆகிய 12 பேர் காயமடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 12 பேரையும், பஸ்சின் கண்ணாடியை உடைத்து மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திருச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பினு(36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சரிசெய்தனர். விராலிமலை அருகே சாலையில் பஸ் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்