பரமக்குடி அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு மதுரை–ராமேசுவரம் பயணிகள் ரெயில்கள் நின்று செல்வது வழக்கம்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சூடியூர் ரெயில் நிலையத்தில் மதுரை–ராமேசுவரம் பயணிகள் ரெயில்கள் நின்று செல்வது வழக்கம். இதன்படி நேற்று காலை 8.15 மணிக்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரெயில் சூடியூர் ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டது.
அப்போது தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருப்பது லைன்மேன்கள் மூலம் தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரெயில்வே தொழிலாளர்களின் முயற்சியால் விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு சுமார் 10 மீட்டருக்கு முன்பாக ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் லைன்மேன்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரி செய்தனர். அதனை தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.