மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கர்நாடகத்தில் 27-ந் தேதி முழு அடைப்பு

மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கர்நாடகத்தில் வருகிற 27-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

Update: 2018-01-10 22:05 GMT
பெங்களூரு,

கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய 3 மாநிலங்கள் இடையே மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

மகதாயி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் சந்தித்து பேசி ஒரு தீர்வு காணலாம் என்று மகதாயி நடுவர் மன்றம் ஆலோசனை வழங்கி இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் சந்திப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது.

அதனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இதற்காக வடகர்நாடக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வருவதால் இதனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி தீர்வு காண்பதற்கு பல்வேறு அமைப்புகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை நாங்கள் ஓய மாட்டோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மாநில அரசு அலட்சியமாக செயல்படுவதும், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் சரியல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த பிரச்சினையில் 900 நாட்கள் வட கர்நாடக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

மகதாயி நதிநீர் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் எழுப்பவில்லை. பிரதமரிடம் இதுபற்றி எடுத்துக்கூறி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பா.ஜனதா எம்.பி.க்கள் தோல்வி அடைந்துவிட்டனர். அரசியல் கட்சிகள் நாடக மாடுகின்றன. மாநில மக்களுக்கு மோசம் செய்கின்றன. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. சிக்பள்ளாப்பூர், துமகூரு, கோலார் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கும் குடிநீர் திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றவில்லை.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்காத கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி பெங்களூரு வருகிறார். அதற்குள் மகதாயி பிரச்சினைக்கு அவர் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் 27-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு இன்னும் ஒரு மாதத்தில் தீர்ப்பை அறிவிப்பதாக கூறி இருக்கிறது. இந்த பிரச்சினையில் என்ன நடக்குமோ என்று ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடக அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.”

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்