குரும்பூரில் தையல் தொழிலாளி மர்மச்சாவு வாழைத்தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்
குரும்பூரில் தையல் தொழிலாளி வாழைத் தோட்டத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
தென்திருப்பேரை,
குரும்பூரில் தையல் தொழிலாளி வாழைத் தோட்டத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தையல் தொழிலாளிகுரும்பூர் தபால் நிலைய தெரு ஆறுமுகநாடார் காம்பவுண்டில் வசித்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 45). இவர் அங்குள்ள டெய்லர் கடையில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் திருமணமான 5 ஆண்டுகளில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் நேற்று காலையில் கடைக்கு வேலைக்கு செல்லவில்லை. எனவே, அந்த கடையின் உரிமையாளர், அவரை தேடிச் சென்றார்.
அப்போது குரும்பூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் கிணற்றின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் ராமசுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குரும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
மர்மச்சாவுஉடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்த ராமசுப்பிரமணியனின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தீவிர விசாரணைஅவர், தண்ணீர் தொட்டியில் குளித்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமசுப்பிரமணியனின் சொந்த ஊர் தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு ஆகும். இவருக்கு ஆவுடையப்பன் உள்ளிட்ட 4 சகோதரர்கள், 5 சகோதரிகள். இவர்கள் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர்.