கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28–ந் தேதி தொடங்குகிறது
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்குகிறது.
பாவூர்சத்திரம்,
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்குகிறது.
தோரணமலை முருகன் கோவில்நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.
தென்றல் தவழும் தென் பொதிகை மலை தொடரில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்ற முதுமொழிக்கேற்ப தமிழ் கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் மலைதான் தோரணமலை. இந்த மலையானது அகத்தியர், தேரையர் சித்தர் தவம் புரிந்த தலம் என்று கூறப்படுகிறது.
தைப்பூச திருவிழாதென்காசி– கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர்– உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தி அந்த பகுதியில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் தர்மராஜ் தொடங்கி வைக்கிறார்.
திருக்கல்யாணம்30–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் பள்ளி மாணவ– மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தோரணமலை முருகனின் வரலாறு குறித்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இரவு 10 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
31–ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மலைஅடிவாரத்தில் உள்ள சொக்கலால் கலையரங்கில் சுவாமி– வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், அன்னதானமும் நடக்கிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பவுர்ணமி கிரிவலம்இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, அம்பை பகுதி மக்கள் ஏராளமானவர்கள் வந்து முருகனை வழிபட்டு செல்வார்கள். அன்று மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை 6 மணிக்கு கிரிவலம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.