நெல்லை சந்திப்பில் துணிகரம் செருப்பு கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
நெல்லை சந்திப்பில் செருப்பு கடையில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பில் செருப்பு கடையில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
செருப்புக்கடைநெல்லை சந்திப்பு பெருமாள்சன்னதி தெருவை சேர்ந்தவர் தக்காராம் (வயது47). இவருடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலமாகும். இவர் நெல்லையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகில் மொத்த செருப்பு கடையும், ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 8 மணி அளவில் கடைக்கு வந்தார்.
ரூ.10 லட்சம் கொள்ளைஅப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தக்காராம், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த பீரோ, மேஜை ஆகியன உடைக்கப்பட்டும், கடையில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறியும் கிடந்தன. மேஜை டிராயரில் இருந்த ரூ.10 லட்சம், வங்கி காசோலை, பில்புக் உள்ளிட்டவை காணாமல் போய் இருந்தது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசில் தக்காராம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
மர்மநபர்கள் கைவரிசைகொள்ளை போன ரூ.10 லட்சத்துக்கான கணக்கு விவரங்களை தக்காராமிடம் கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்மநபர்கள் செருப்பு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்–இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் பீதிநெல்லை சந்திப்பு பகுதியானது நெல்லை மாநகரின் மத்திய பகுதியாக உள்ளது. எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கடை அதிபர் ஒருவரது வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளை போனது. பாலபாக்கியாநகர், சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களிலும் பணம்– நகைகள் கொள்ளை போய் உள்ளது.
இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் நெல்லை சந்திப்பு பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதுபோன்ற கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதுமட்டும் அல்லாமல் கூடுதல் போலீசாரையும் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.