வடக்கு விஜயநாராயணத்தில் மனுநீதிநாள் முகாம் 125 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

வடக்கு விஜயநாராயணத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில், 125 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.;

Update: 2018-01-10 21:00 GMT

இட்டமொழி,

வடக்கு விஜயநாராயணத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில், 125 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம்

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீசுவரர் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 125 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

மாவட்டம் முழுவதும் இதுபோன்ற மனுநீதிநாள் முகாம்கள் நடத்தும்போது தான் அரசின் திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது. கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 98 மனுக்களில் 71 மனுக்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் 42 துறைகளில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் பொங்கல் பொருட்கள் வருகிற 18–ந் தேதி வரை வழங்கப்படும். இலவச வேட்டி– சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைத்துறை மூலம் கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்படுகின்றன. கல்வித்துறை மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

நெல் நடவு பணிகளை பார்வையிட்டார்

நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன் நன்றி கூறினார். பின்னர் வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது வயலுக்கு சென்று, எந்திர நெல் நடவு பணியை பார்வையிட்டு, வயல் கரைகளில் நடுவதற்கு சூரியகாந்தி விதைகளை வழங்கினார்.

பின்னர் வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து புறப்பட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது மேற்பார்வையில் ரூ.4.85 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நர்சரி செடிகள், காய்கறி செடிகள் வளர்க்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தினார்

நாங்குநேரி தாலுகாவில் பரப்பாடி, காரியாண்டி ஆகிய ஊர்களில் இதுபோல காய்கறி செடிகளை பள்ளி வளாகத்தில் வளர்த்து, அதில் கிடைக்கும் காய் கனிகளை பள்ளி சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

பின்னர் 12–ம் வகுப்பு கணித பிரிவு வகுப்புக்குள் சென்ற கலெக்டர், அங்கு மாணவ–மாணவிகளிடம் பாடங்கள் குறித்து கேள்விகள் கேட்டு பாடம் நடத்தினார். அப்போது, விவசாயம் குறித்து மாணவ–மாணவிகள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்றார். பள்ளி வளாகத்தில் உள்ள நர்சரி தோட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா என கேட்டறிந்தார். பின்னர் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்களிடமும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்