கோவில்பட்டி, திருச்செந்தூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவில்பட்டியில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும், திருச்செந்தூரில் ஒரு சட்டசபை தொகுதிக்கும் நேஹ்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Update: 2018-01-10 21:30 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும், திருச்செந்தூரில் ஒரு சட்டசபை தொகுதிக்கும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உதவி கலெக்டர் அனிதா இந்த பட்டியலை வெளியிட்டார். அதனை தாசில்தார்கள் ஜான்சன் தேவசகாயம் (கோவில்பட்டி), லிங்கராஜ் (விளாத்திகுளம்), நம்பிராயர் (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் பெற்று கொண்டனர்.

உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியன், தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், நாகேந்திரன், முத்து, கிருஷ்ணகுமாரி, அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

வாக்காளர்கள் விவரம்

கோவில்பட்டி சட்டசபை தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 604 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 828 பேரும், திருநங்கை வாக்காளர்கள் 12 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 444 வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 363 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 429 பேரும், திருநங்கை வாக்காளர்கள் 2 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 794 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 30 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 531 பேரும், திருநங்கை வாக்காளர்கள் 17 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் கணேஷ்குமார் வெளியிட்டார். இந்த சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 342 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 35 பேரும், திருநங்கை வாக்காளர்கள் 15 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 392 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்

பின்னர் உதவி கலெக்டர் கணேஷ்குமார் கூறுகையில், ‘திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமும் வழங்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதில் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கலாம். மேலும் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, வருகிற 25–ந்தேதி வாக்காளர் தினத்தன்று சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று கூறினார். திருச்செந்தூர் தாசில்தார் அழகர், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன், தேர்தல் துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்