கோவிலில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி பீகார் வாலிபருக்கு தர்ம அடி
கோவிலில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக பீகார் வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பொன்னேரி,
பொன்னேரி– மீஞ்சூர் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய தனலட்சுமி என்பவர் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல கோவிலிலேயே தூங்கினார். நள்ளிரவில் கோவிலுக்குள் வந்த மர்ம நபர் தனலட்சுமியை திடீரென தாக்கினார். கோவில் சாவியை கேட்டும் மிரட்டினார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த தனலட்சுமி கூச்சலிட்டார். உடனே மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வாலிபரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த மஞ்ஜீத்(வயது 32) என்பது தெரிய வந்தது. கோவில் அருகே மேலும் 3 வட மாநில வாலிபர்கள் நின்றதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர். நண்பர் சிக்கியதும் அவர்கள் தப்பி ஓடி இருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.