சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய வாலிபர் கைது

மராட்டியத்தில் மீண்டும் முழு அடைப்பு என சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-01-09 21:38 GMT

மும்பை,

புனே பீமா – கோரேகாவ் வன்முறை சம்பவத்தை கண்டித்து கடந்த 3–ந் தேதி மராட்டியத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. முழுஅடைப்பு போராட்டத்தினால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலமே ஸ்தம்பித்து போனது.

முழுஅடைப்பின் போது, சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன. இந்த நிலையில், மாநிலத்தில் 10–ந் தேதி (இன்று) சகல் மராத்தா சமாஜ் சங்கட்னா என்ற அமைப்பு முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் உண்டாக்கியது. போலீஸ் துறைக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்த நிலையில், தாங்கள் எந்தவொரு முழுஅடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை என மராத்தா சமூகத்தினர் தெரிவித்தனர்.

இதனால் தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தும் நோக்கில் யாரோ மர்மஆசாமி அந்த தகவலை பரப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை, புனே, சோலாப்பூர் போலீசார் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதில் சோலாப்பூர் அருகே உள்ள பாட்குல் கிராமத்தை சேர்ந்த விஷால் பிரகாஷ் (21) என்ற வாலிபரே முழு அடைப்பு குறித்து வதந்தி பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்