மனவி விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி தொடர்ந்த விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-01-09 22:15 GMT

பாகூர்,

கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்– மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தேன்மொழி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் கணவரிடம் விவாகரத்து கேட்டு தேன்மொழி கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராக கார்த்திகேயனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனின் தந்தை சுப்ரமணியன் இறந்துபோனார். அவரது கருமகாரிய நிகழ்ச்சி நாளை நடைபெற இருந்தது. இதற்காக கார்த்திகேயன் தனது உறவினர்களுக்கு கருமகாரிய பத்திரிகை கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தவளக்குப்பத்தில் உள்ள சகோதரி மகேஸ்வரி வீட்டுக்கு கார்த்திகேயன் சென்றார். அவரை கருமகாரிய ஏற்பாடுகளை கவனிக்க தூக்கணாம்பாக்கத்துக்கு குடும்பத்துடன் கார்த்திகேயன் அனுப்பிவிட்டு தனிமையில் இருந்தார்.

தந்தை இறந்ததாலும், மனைவி தொடர்ந்த விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுவதற்கு பயந்தும் மிகுந்த மனவேதனை அடைந்த கார்த்திகேயன் சகோதரி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் கார்த்திகேயன் தூக்கணாம்பாக்கம் வராததால் சந்தேகம் அடைந்த மகேஸ்வரி, தவளக்குப்பத்துக்கு வந்து பார்த்தார். அப்போது கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த சில நாட்களிலேயே மகனும் இறந்ததால் துக்க வீட்டில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்