காவிரி நீரை பெற்றுத்தரக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்றுத்தரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தலைமை பொறியாளர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் தற்போது தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. பாதிப்பை உணர்ந்து, இதில் பிரதமர் அவசரமாக தலையிட்டு குறைந்தது 63 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்து கருகும் பயிரை காப்பாற்ற சட்டமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து வெளியே வந்த விவசாயிகள், அந்த அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், இன்று (நேற்று) சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே கர்நாடக அரசிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தோடு அனைத்து கட்சியினர் பிரதமரை சந்தித்து காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் கவர்னரிடமும் தீர்மானத்தை வழங்கி பிரதமர் மூலம் தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவாதம் வரும் வரை இந்த அலுவலகத்தில் எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று கூறினர்.
இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் விரைவில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.