வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி புகார்: சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வார்டு மறுவரையறையில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் தெரிவித்து, சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-09 21:45 GMT

சூரமங்கலம்,

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமி‌ஷனரிடம் புகார் மனு கொடுத்து வருகிறார்கள். சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா அருகே உள்ள 23–வது வார்டு அம்மாசி நகர் 800 வாக்காளர்கள், பள்ளப்பட்டி 25–வது வார்டில் இணைக்கப்பட்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது.

இந்த வார்டு மறுவரையறையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நேற்று காலை வாக்காளர் அட்டை மற்றும் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க சேலம் பழைய சூரமங்கலத்தில் உள்ள மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதியில் உள்ளவர்களை பள்ளப்பட்டியில் உள்ள 25–வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே 25–வது வார்டில் சேர்க்கப்பட்டவர்களை மீண்டும் 23–வது வார்டில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் மறியலில் ஈடுபடுவோம்’ என்றனர்.

இதைக்கேட்ட உதவி செயற்பொறியாளர், வருகிற 12–ந் தேதி வரை வார்டு மறுவரையறை தொடர்பாக கருத்து கேட்புக்கான கால அவகாசம் உள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து மனுவாக கொடுங்கள். இந்த மனு உதவி கமி‌ஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்