தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் 243 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 48 பெண்கள் உள்பட 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-09 22:15 GMT

தஞ்சாவூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6–வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் ஜெயவேல்முருகன் தலைமை தாங்கினார்.

இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் அன்பரசன், ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன், ராமசாமி, வெங்கடேசன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், தாமரைச்செல்வன், கஸ்தூரி, ஐ.என்.டி.யூ.சி. சரவணன், தமிழ்மாநில காங்கிரஸ் சங்க நிர்வாகி சுப்பிரமணியன், தமிழக மக்கள் முன்னேற்ற சங்க பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விரைவுபோக்குவரத்து கழகத்தை நோக்கி பேரணியாக புறப்பட தயாராகினர். அப்போது அவர்களை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பின்னர் போக்குவரத்து தொழிலாளர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்றம் வேலைநிறுத்தப்போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து வழங்கிய தடையை நீக்க வேண்டும். தமிழக முதல்–அமைச்சர் உடனடியாக தலையிட்டு அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உள்பட 173 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் கைக்குழந்தையையும் எடுத்து வந்திருந்தார். இதில் 4 சிறுவர்களும் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 இடங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்