குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,250 பெண்களுக்கு 10 கிலோ தங்கம்– ரூ.5¼ கோடி திருமண நிதி உதவி

குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,250 பயனாளிகளுக்கு 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.5¼ கோடி திருமண நிதி உதவியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

Update: 2018-01-09 21:45 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,250 பயனாளிகளுக்கு 10 கிலோ தங்க நாணயங்கள் மற்றும் ரூ.5 கோடியே 35 லட்சம் திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் நிதி உதவி காசோலைகளை வழங்கினர்.

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசும்போது கூறியதாவது:–

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் சமூகநலத்துறை சார்பாக படித்த ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாய் வீட்டு சீதனமாக தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டு வருகிறது. 2016–17–ம் நிதியாண்டில் 7,202 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டதாரி அல்லாத 892 ஏழை பெண்களுக்கும், பட்டபடிப்பு முடித்த 358 ஏழை பெண்களுக்கும் என மொத்தம் 1,250 ஏழை பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களும், மொத்தம் ரூ.5 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளும் திருமண நிதிஉதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து பேசிய விஜயகுமார் எம்.பி. கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது சமூகநலத்துறை மூலம் படித்த ஏழை பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக 4 கிராம் தங்கம் வழங்கப்படுவதை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதல்கட்டமாக இன்று (அதாவது நேற்று) குமரி மாவட்டத்தில் உள்ள 1,250 ஏழை பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதிஉதவிகள் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து தகுதியான பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. பேசினார்.

மேலும் செய்திகள்