ஈரோட்டில் 6–வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: வெளியூர் பயணிகள் தவிப்பு
ஈரோட்டில் 6–வது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டத்தினால் தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் ஓடாததால் வெளியூர் பயணிகள் தவித்து வருகிறார்கள்.
ஈரோடு,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி இரவு முதல் தமிழகம் முழுவதும் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று முதல் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்திலும் 6–வது நாளாக நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் அரசு பஸ்களின் இயக்கம் தடைப்பட்டது.
தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும், ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் மக்கள் அதிகமாக செல்லும் இடங்களுக்கு மட்டும் பஸ்கள் ஓடுவதால் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் செல்வதில்லை.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையில் முக்கிய பங்காக போக்குவரத்து வசதி இருப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அவசர வேலையாக செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் சிரமம் அடைந்தனர். எனவே போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல் போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அதிகமான தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் ஓரளவு சிரமமின்றி சென்று வர முடிகிறது. ஆனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
ஈரோட்டில் இருந்து மதுரைக்கு ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டாலும், கரூர் வரை மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. கரூரில் இருந்து மாற்று பஸ் மூலம் மதுரைக்கு செல்லுமாறு டிரைவர், கண்டக்டர்கள் கூறுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். எனவே நீண்ட தூரம் செல்ல வேண்டிய வெளியூர் பயணிகள் தங்களது குடும்பத்துடன் வரும்போது, எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் பஸ்கள் ஓடாததால் வெளியூர் பயணத்தை பயணிகள் பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த பஸ்களில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறுகிறார்கள். எனினும் வேறு வழியின்றி அதிகமான தொகையை செலுத்தி பயணிகள் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 77 பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 6–வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்தது. இதன்காரணமாக அந்தியூர் பணிமனையில் இருந்து நேற்று காலை ஈரோடு, கோபி, பவானி, ஆப்பக்கூடல் போன்ற இடங்களுக்கு ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. முக்கியமாக நாகர்கோவில், தூத்துக்குடி, சென்னை போன்ற தொலைத்தூர பஸ்கள் இயக்கப்படவில்லை.
மேலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக காக்கி சீருடை அணியாமல் சில நிரந்தர டிரைவர்கள் கலர் ஆடை அணிந்து பஸ்களை ஓட்டினர். மாலையில் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி பர்கூர் மலைக்கிராமங்களில் உள்ள மலைக்கிராம மக்களும் தங்களுடைய பகுதிக்கு செல்ல முடியாமல் அந்தியூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.
இதேபோல் பவானி பகுதியிலும் குறைந்த அளவிலான அரசு பஸ்களே இயங்கின. இதனால் மாணவ– மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.