ஈரோட்டில் பரபரப்பு அதிக கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-09 22:45 GMT

ஈரோடு,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு பஸ்கள் அதிகமாக ஓடவில்லை. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று காலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சை சங்ககிரியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டினார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சதீஸ் என்பவர் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வந்தது. அங்கு 15 தொழிலாளர்கள் ஈரோட்டிற்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்கள். பஸ் புறப்பட்ட பிறகு அவர்களிடம் தலா ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவர்கள் கண்டக்டர் சதீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் திடீரென போராட்டம் நடத்தினார்கள். அப்போது தனியார் பஸ்சை சிறைபிடித்த பயணிகள் தரையில் அமர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பயணிகள் கூறும்போது, ‘‘பெருமாநல்லூரில் இருந்து ஈரோட்டிற்கு ரூ.18 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பஸ்சில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

எனவே எங்களுடைய பணத்தை திரும்ப தர வேண்டும்’’, என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பயணிகளிடம் சதீஷ் திருப்பி கொடுத்தார். அதன்பின்னர் பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்