குடிபோதையை மறக்க கோவிலுக்கு கயிறு கட்ட சென்றபோது கார் கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பூ முனியப்பன் கோவிலுக்கு கயிறு கட்ட நேற்று காரில் சென்றனர்.

Update: 2018-01-09 21:45 GMT

பெருந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 4 பேர் குடிபோதையை மறக்க சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பூ முனியப்பன் கோவிலுக்கு கயிறு கட்ட நேற்று காரில் சென்றனர். ‘நாளையோடு குடியை மறப்பதால் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் குடித்துக்கொள்ளலாம்’ என்று எண்ணி ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்துள்ளார்கள். பின்னர் அங்கிருந்து சங்ககிரி செல்ல தேசிய நெடுஞ்சாலையை காரில் கடக்க ஒரு வளைவில் திருப்பினார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயம் அடைந்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், 4 பேரும் வழக்குப்பதிவு எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

மேலும் செய்திகள்