சிதம்பரம் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

சிதம்பரம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-09 22:30 GMT

புவனகிரி,

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களின் தேவைக்காக கல்லூரி வளாகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் மாணவ– மாணவிகள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் குடிநீர், கழிவறை வசதி கேட்டு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவ– மாணவிகள் நேற்று காலை 9.30 மணி அளவில் திடீரென வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கிள்ளை சப்–இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள், கல்லூரியில் எங்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் குடிநீருக்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. எனவே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்