கடலூரில் பரபரப்பு அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
மக்களுக்காக போராடும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தும், பழிவாங்கும் நோக்கில் எவ்வித குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாத குறிப்பாக படித்த இளைஞர்கள் பெயரை ரவுடிகள் பட்டியலில் பல ஆண்டுகளாக சேர்த்துள்ளதை நீக்க வேண்டும் எ
கடலூர்,
மக்களுக்காக போராடும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தும், பழிவாங்கும் நோக்கில் எவ்வித குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாத குறிப்பாக படித்த இளைஞர்கள் பெயரை ரவுடிகள் பட்டியலில் பல ஆண்டுகளாக சேர்த்துள்ளதை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று வக்கீல் அணி மாநில துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கார் நிறுத்தம் அருகில் திரண்டனர். இதையடுத்து அங்கு 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், சிதம்பரம் பாராளுமன்ற செயலாளர் செல்லப்பன், கதிர்வாணன், கெய்க்வாட்பாபு, மாநில நிர்வாகி ஸ்ரீதர், தொண்டரணி பாவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.