அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனின் சீராய்வு மனு ஏற்பு ஐகோர்ட்டு உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனின் சீராய்வு மனுவை ஏற்ற ஐகோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வது பற்றி பரிசீலிக்கும்படி, கீழ்க்கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

Update: 2018-01-09 23:00 GMT

மதுரை,

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மீது கடந்த 1996–ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக 17 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை அல்லிகுளம் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் தினகரன் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 5–ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கே.எம்.நாயர் இறந்துவிட்டார். அதை அரசு தரப்பில் உறுதி செய்து, சாட்சிகளின் பெயர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மற்றொரு சாட்சியான மலேசியாவில் வசிக்கும் ராஜூ என்பவருக்கு 100 வயதாகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது பெயரை சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சில சாட்சிகள் எங்கு உள்ளனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களை சாட்சிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு தற்போது அரசு தரப்பில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. சாட்சிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பும்போது தான் அவர்கள் உடல் மற்றும் மனநலன் ரீதியில் நல்ல நிலையில் இருக்கிறார்களா என தெரியவரும்.

மனுதாரர் தானாக மனு தாக்கல் செய்து உள்ளார் என்று கூறி தொடக்கத்திலேயே அவரது மனுவை கீழ்க்கோர்ட்டு நிராகரித்தது ஏற்புடையதல்ல. மனுதாரர் தரப்பில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த விரும்புகின்றனர். மனுதாரர் தரப்பில் தேவையில்லாமல் வழக்கை இழுத்தடிக்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கைகள் இருப்பதாக தெரியும்பட்சத்தில் கீழ்க்கோர்ட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து கீழ்க்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தனது கோரிக்கையை வலியுறுத்தி புதிதாக கீழ்க்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்