ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஆயுள்தண்டனை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.;
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆர்.கே. நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்ட போதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெறுவதும், பதவிக்கு வந்த பிறகு அந்தப்பணத்தை சம்பாதிப்பதற்காக அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 2016–ல் நடந்த தேர்தலில் 5.58 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது தேர்தல் நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதை காட்டுகிறது.
எனவே, எதிர்காலத்தில் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வேட்பாளருக்கும், ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கவும், பணம் வாங்கும் வாக்காளர்கள் எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் ஓட்டு போட முடியாதவாறு வாக்காளர் அடையாள அட்டையை பறிமுதல் செய்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.