திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தி.மு.க. நிர்வாகி காயம்

திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தி.மு.க. நிர்வாகி காயமடைந்தார். இதைக்கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-09 22:45 GMT

திருப்பூர்,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந் தேதி முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் போதிய பஸ் வசதியில்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தின் 2 பணிமனைகளிலும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை கொண்டு அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பூர் நல்லூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தற்காலிக டிரைவராக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நியமிக்கப்பட்டார். பின்னர் சோதனை ஓட்டமாக திருப்பூரில் இருந்து சேவூர் செல்லும் டவுன் பஸ்சை பழனிச்சாமி ஓட்டி வந்தார். காலை 11 மணி அளவில் செல்லாண்டியம்மன் துறை அருகே வந்தபோது பஸ்சை திருப்ப முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சந்திராபுரத்தை சேர்ந்த தங்கமணி(வயது 48) ஓட்டி வந்த ஸ்கூட்டரில் பஸ் மோதியது. இதில் பஸ்சின் அடியில் கிடந்து தங்கமணி சத்தம்போட்டதால் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் தங்கமணியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது. தங்கமணி நல்லூர் பகுதி தி.மு.க. நிர்வாகி ஆவார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய தற்காலிக டிரைவரை கண்டித்து தி.மு.க.வினர் செல்லாண்டியம்மன் துறையில் இருந்து காங்கேயம் ரோடு செல்லும் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காயமடைந்த தங்கமணியை உடனடியாக அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக 10 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் சம்பவ இடத்திலேயே நின்றது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட், அரசு டவுன் பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்து பஸ்சை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்து, தற்காலிக டிரைவர்களை தொடர்ந்து போலீஸ் அதிகாரியும் அரசு பஸ்சை ஓட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது அந்த வழியாக மற்றொரு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் அருகே சென்ற கார் மீது உரசியதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதே பகுதியில் மற்றொரு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்றார். அந்த பஸ், வளம் பாலம் ரவுண்டானாவில் மோதியது. இதில் பஸ்சின் வலதுபுற பின்பக்க சக்கரம் அருகே சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயமில்லை. இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரசு பஸ்சை இயக்குவதில் தற்காலிக டிரைவர்களுக்கு சிரமம் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்