திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-01-09 22:30 GMT

திருப்பூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந் தேதி முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் அரசு பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. கோவை கோட்ட பொதுச்செயலாளர் சண்முகம் வாழ்த்தி பேசினார். எல்.பி.எப். மண்டல துணை பொதுச்செயலாளர் தங்கவேல், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சுந்தரவேல் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். தலைமை அறிவிப்புக்கு பின், அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்