கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-01-09 22:30 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 6–வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகளும் சிரமப்பட்டனர்.

கோவையில் இயக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு எல்.பி.எப். தொழிற்சங்க மண்டல செயலாளர் ரத்தினவேலு தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யுசி., எச்.எம்.எஸ்., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

அரசு பஸ் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,500ஆக நிர்ணயிக்க வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் முறைப்படி வழங்க வேண்டும், ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், பிடித்தம் செய்த தொகையை முறைப்படி அவரவர் கணக்குகளில் செலுத்த வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை எங்கள் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம்.

இதையடுத்து, தற்காலிக டிரைவர், கண்டக்டரை நியமித்து இயக்கம் அரசு பஸ்கள் விபத்தில் சிக்குவதால் பொதுமக்கள் அரசு பஸ்களில் ஏற அச்சப்படுகிறார்கள். பொதுமக்களின் நலனிலும், பஸ் ஊழியர்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தினால் இது போன்று நடந்து இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முற்றுகை போராட்டம் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பஸ் டெப்போ முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் முடிந்ததும் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்